நண்பன்
1/14/2012 10:15:07 AM ஷங்கரின் பிரமாண்டத்தில் ‘நண்பனா’கியிருக்கிறது, இந்தி ‘3 இடியட்ஸ்’. வேலைக்குச் சென்று குடும்ப பாரத்தை சுமக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் என்ஜினீயரிங் சேரும் ஜீவா, போட்டாகிராபியில் ஆர்வம் இருந்தும், அப்பாவின் வற்புறுத்தலால் படிக்கும் ஸ்ரீகாந்த், எந்த கமிட்மென்டும் இல்லாமல் தனக்குப் பிடித்தமான என்ஜினீயரிங்கை ஜாலியாக படிக்க வந்திருக்கும் கோடீஸ்வர இளைஞன் விஜய். மூவருமே நண்பர்களாகிறார்கள்.
சீனியர்களின் ராக்கிங்கை எதிர்கொள்வதிலிருந்து, டெரர் பிரின்சிபல் சத்யராஜின் டார்ச்சர்களை சமாளிப்பது வரை விஜய்யின் அணுகுமுறைகள் வித்தியாசமானவை. விஜய், ஜீவாவின் படிப்பு பயம் போக்கி வேலைக்குச் செல்ல காரணமாகிறார். ஸ்ரீகாந்தின் தந்தை மனதை மாற்றி அவருக்கு பிடித்த போட்டோகிராபி கற்க வைக்கிறார். எப்போதும் காசை பார்க்கும் மாப்பிள்ளையிடமிருந்து இலியானாவைக் காப்பாற்றுகிறார். மாணவர்களை மட்டம் தட்டும் கல்லூரி முதல்வர் சத்யராஜை திருத்துகிறார். இப்படி பலருக்கும் சர்வரோக நிவாரணியாக இருக்கும் விஜய், படிப்பு முடிந்ததும் எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை. சில வருடங்களுக்கு பிறகு அவர் பற்றிய தகவல் கிடைக்க, அவரைத் தேடி ஜீவாவும், ஸ்ரீகாந்தும் பயணிக்கிறார்கள். அப்போது தான் அவர்களுக்கு விஜய் பற்றிய திக் தகவல்கள் கிடைக்கிறது. அது என்ன? விஜய் யார் என்பதுதான் படம்.
பஞ்சவன் பாரிவேந்தன் கேரக்டருக்குள் அப்படியே தன்னை பொருத்தியிருக்கிறார் விஜய். தனது வழக்கமான குறும்பு, நக்கல், நையாண்டி, ரொமான்ஸ் அத்தனை¬யும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ரீபிள் பேனாவின் கண்டுபிடிப்பு பற்றி சத்யராஜ் சிலாகித்து பேச, அதை விஜய் மடக்குவதில் தொடங்கி, இலியானாவின் வருங்கால மாப்பிள்ளையின் பணக் கணக்கை புரிய வைத்து மனக்கணக்கு போடுவது வரை விஜய்யின் கொடி பறக்கிறது. ஜீவா உணர்விழந்து மருத்துவமனையில் கிடக்கும்போது அவரை சிரிக்க வைத்து குணப்படுத்த விஜய் எடுக்கும் முயற்சிகளின்போது அவரது முகபாவம் யதார்த்தம்.
ஏழை குடும்பத்து கனவு மாணவனை கண்முன் நிறுத்துகிறார் ஜீவா. வீட்டுக்கு வந்த நண்பர்களிடம், குடும்ப கஷ்டத்தை சொல்லி அம்மா மானத்தை வாங்கும்போது அவமானத்தால் கூனிக்குறுகி நிற்கும்போதும், கால் ஒடிந்த நிலையிலும் கேம்பஸ் இன்டர்வியூவில் தில்லாக முடிவெடுக்கும்போதும் அசர வைக்கிறார். தந்தையின் விருப்பம், தனது ஆசை இரண்டுக்கும் இடையில் கிடந்து தவிக்கும் நடுத்தர குடும்ப கேரக்டரில் ஸ்ரீகாந்த். ‘என்வேலையில பணம் பெருசா கிடைக்காதுப்பா, ஆனா சந்தோஷம் அதை விட அதிகமா கிடைக்கும்’ என்று தந்தையிடம் கலங்கும்போது நம்மையும் கலங்க வைக்கிறார்.
நண்பர்கள் வட்டத்தில் வராவிட்டாலும் சமயத்தில் அவர்களையும் ஓவர்டேக் செய்கிறார் சத்யன். ஆசிரியர் தின விழாவில் அவர் அடிக்கும் கூத்து நான்ஸடாப் காமெடி. அதேபோல தன்னை அவமானப்படுத்திய விஜய்யிடம், சவால் விடும் இடத்தில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் ஆச்சர்யப்படுத்தவும் செய்கிறார். சிறு காட்சியில் வந்தாலும் நெஞ்சில் நிற்கிறார்கள் வசந்த் விஜய்யும் எஸ்.ஜே.சூர்யாவும். அக்மார்க் ஈகோ பிரின்ஸ்பல் கேரக்டருக்கு ஆர்ப்பாட்டமாக பொருந்துகிறார் சத்யராஜ். மாணவர்களையே எதிரிகளாக நினைத்துக் கொண்டு அவர்களுக்கு எதிராக, காய் நகர்த்துவதை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்.
இத்தனை விதவிதமான கேரக்டர்களுக்கு இடையில் வழக்கமான ஹீரோயினாக இலியானா. டாக்டருக்கு படித்தாலும் தான் மணக்கப்போகும் ஒருவனின் குணத்தைகூட அறிந்து கொள்ள முடியாத அப்பாவி ஹீரோயின். ஆனாலும் அப்பாவின் தப்பான முடிவை தட்டிக் கேட்டு அவருக்கு புத்தி புகட்டும் காட்சியில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார் அழகு இலியானா. ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசையும், பாடல்களும் சுகம். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் அழகாகிறது.
எல்லாவற்றையும் பாசிட்டிவாக யோசிக்கும் விஜய், சத்யனுக்கு பாடம் கற்பிக்க அவருக்கு தவறான ஸ்கிரிப்டை கொடுத்து கல்லூரி விழாவையே களங்கப்படுத்துவதும், திருடன் போல வினாத்தாளை திருடுவதும், குடித்து விட்டு சத்யராஜ் வீட்டில் அலம்பல் செய்வதும் நெருடல். விஜய், இலியானா காதலில் அழுத்தம் இல்லை. அதனால் பாடல்களை தவிர மற்ற காட்சிகளில் காதல் கவரவில்லை. விஜய், எஸ்.ஜே.சூர்யா தொடர்பிலும், இத்தனை தகவல் தொடர்புகள் வளர்ந்துவிட்ட நிலையில் விஜய் யாருக்கும் தெரியாமல் வாழ்வதும் சாத்தியமா? என்கிற கேள்விகள் இருந்தாலும் இந்த நண்பன் எல்லோருக்கும் பிடிக்கிறான்.